Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 4, 2018

கால்நடை மருத்துவத் தரவரிசைப் பட்டியல்: 74% கிராமப்புற மாணவர்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், பிளஸ் 2 தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் 74 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.


இளநிலை கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன.



கால்நடை மருத்துவப் படிப்புக்கு 10149, பி.டெக் படிப்புகளுக்கு 2242 என மொத்தம் 12,391 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு 9674 விண்ணப்பங்களும், பி.டெக் படிப்புகளுக்கு 2071 விண்ணப்பங்களும் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் பட்டியலை வெளியிட்டார். இந்த தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

3 இடங்கள்: கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஸ்ரீ கார்த்திகா 199.67 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ரஜினிரகு 199.50 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.கே.இந்துமதி 199.50 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
பி.டெக் படிப்புகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பூஜிதா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மணிவாசகம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.இலக்கியா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

கிராமப்புற மாணவர்கள்: தரவரிசைப் பட்டியலுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் 43.12 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களே அதிகம் பெற்றுள்ளனர். அதன்படி, தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 74.04 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
இணையதளத்தில்: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் கூறியது:-ஜூலை 4-ஆவது வாரத்தில் கலந்தாய்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சரியான தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அட்டவணை இன்னும் ஓரிரு தினங்களில் இணையதளத்தில் வெளியிடப்படும்.



தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் பிற மாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கலந்தாய்வுக்காக ஒதுக்கப்படும் 15 சதவீத இடங்களை வேறு மாநில மாணவர்கள் பெற முடியும். ஆனால், அகில இந்திய கலந்தாய்வுக்காக ஒதுக்கப்படும் தமிழக இடங்களை தமிழக மாணவர்கள் பெற முடியாது என்றார் அவர்.

அழைப்புக் கடிதம்: கலந்தாய்வில் பங்கேற்பது குறித்த குறுந்தகவல் மாணவர்களுக்கு அனுப்பப்படும். அந்த குறுந்தகவலில் இணையதளத்தில் சென்று அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான உள்நுழைவு அடையான எண் மற்றும் கடவுச்சொல் அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். அழைப்புக் கடிதம் இல்லாதவர்களும் அட்டவணையின்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவித்தனர்.

விவசாயக் கூலி தொழிலாளியின் மகள் முதலிடம்
விவசாயக் கூலித் தொழிலாளியின் மகள் ஸ்ரீ கார்த்திகா கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சின்னவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ கார்த்திகா. அவரின் தந்தை பழனிசாமி விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். நீட் தேர்வுக்கு படிக்க வசதியில்லாததால் கால்நடை மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்ய உள்ளதாக மாணவி பி.ஸ்ரீ கார்த்திகா கூறினார்.

தரவரிசையில் முதலிடம் பெற்றது குறித்து அவர் கூறுகையில், மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்பது தான் என் விருப்பம். ஆனால் நீட் பயிற்சி மையத்துக்குச் சென்று தேர்வுக்குத் தயாராகும் அளவுக்கு வீட்டில் வசதியில்லை. அதனால் நீட் தேர்வை எழுதவில்லை.



கட்-ஆஃப் மதிப்பெண்ணே இலக்கு: பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்கு 985 எடுத்துள்ளேன் (ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் படித்தவர்). எனினும், இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய முக்கியப் பாடங்களில் எடுத்த மதிப்பெண் காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.67 பெற்று கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றேன். வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளேன்.

எனினும் கால்நடை மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்க இருக்கிறேன். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்ய உள்ளேன் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News