Wednesday, July 18, 2018

8 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

8 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் 2 ஆண்டுகள் படிப்பை முடித்த 8 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சவீதா பல் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயலில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் 2016-17ஆம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள், பல் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். 



இவர்களது சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்திய பல்மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், மருத்துவ படிப்பில் யாரையும் சேர்க்க முடியாது என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து 8 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது பல்மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் எந்த ஒரு மாணவரையும் மருத்துவக் கல்வியில் அனுமதிக்க முடியாது. இந்த 8 மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் பல் மருத்துவ கவுன்சிலினால் எதுவும் செய்ய முடியாது. இவர்களது சேர்க்கைக்கு ஒப்புதலும் அளிக்க முடியாது” என்று வாதிட்டார்.



இதையடுத்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி வைத்தியநாதன். “இந்த 8 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விட்டது. அதனால், அந்த 8 மாணவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

Popular Feed

Recent Story

Featured News