Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் அறிமுகம்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் முதல் கட்டமாக 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.



அதில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் தங்களது பாடத் திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில், 2018-2019-ஆம் கல்வியாண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடங்கள் விருப்பப் பாடமாக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகளுடன் இணைந்து செயலாற்றுதல், விரிவுரையாளர்களின் கருத்து, தொழிற்சாலைகளின் பயிற்சி, தொழில் பழகுநர் பயிற்சி, வேலைவாய்ப்புகள் அளிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன பாடங்கள்?: இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் கூறுகையில், கடந்த 1978-1979-ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மேல்நிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலைக் கல்வி அளவில் தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 



தானியங்கி ஊர்தி பொறியியல், மின்னணு வன்பொருள், வீட்டு அலங்காரம் செய்தல், விவசாயம், அழகியல் நிபுணர், சுகாதாரம் ஆகிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் தற்போது 32 மாவட்டங்களிலும் உள்ள 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பாடத்திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறுவர்.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்தத் திட்டத்தை வரவேற்பதோடு தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.



கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்