Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 3, 2018

பிஎச்.டி., முறைகேடுகளை தடுக்க முடிவு: போலியை ஒழிக்க சென்னை பல்கலை அதிரடி

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில், முறைகேடுகள் மற்றும் போலி வருகைப் பதிவை தடுக்க, தொடர் பதிவு முறையை, சென்னை பல்கலை அமல்படுத்தி உள்ளது. இந்த பதிவு, ஆன்லைனில், 2ம் தேதி முதல் துவங்கப்படும்.

உயர் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.



இதன்படி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆன்லைன் அட்மிஷன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய காலங்களில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்களை கட்டுப்படுத்த, நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் ஒரு கட்டமாக, போலி பிஎச்.டி., மற்றும் போலி ஆராய்ச்சி வழிகாட்டிகள் கண்டறியப்பட்டனர்.

அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎச்.டி., மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், போலி வருகைப் பதிவு மற்றும் முறைகேடுகளை தடுக்க, தொடர் பதிவு திட்டத்தை, பல்கலை துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.



அதாவது, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் முழு நேரமாக சேர்பவர்கள் பலர், முறையாக பல்கலைக்கு வராமல், பல்வேறு இடங்களில் பணியாற்றிக் கொண்டே, போலி வருகைப் பதிவு தாக்கல் செய்துள்ளனர்.

அதே போல், ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து விட்டு, ஊக்கத்தொகையும் பெற்று விட்டு, படிப்பை தொடராமல், வேறு பணிகளில் கவனம் செலுத்தி, பல ஆண்டுகளுக்கு பின், திடீரென ஆராய்ச்சி படிப்பை முடித்ததாக கணக்கு காட்டுகின்றனர்.

அதனால், ஆராய்ச்சி படிப்பை முடிப்பவர்களில் பலர், தரமான பேராசிரியர்களாக இல்லை என, தெரியவந்து உள்ளது.

எனவே, பல்கலை மானியக் குழுவின் அறிவுரை படி, தொடர் பதிவு திட்டம், 2ம் தேதி துவங்கப்படுகிறது.

இதில், ஒவ்வொரு ஆராய்ச்சி மாணவரும், ஆண்டுக்கு ஒருமுறை, ஆன்லைனில் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தாங்கள் படிப்பில் சேர்ந்த தேதி, கல்லுாரி அல்லது பல்கலைக்கு முறையாக வந்த வருகைப் பதிவு விபரம், பிஎச்.டி., ஆய்வுக்குழு நடத்திய கூட்ட விபரங்கள், படிப்பின் மீதான முன்னேற்றம் குறித்து, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என, துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.



இந்த விபரங்களை தாக்கல் செய்பவர்கள் மட்டுமே, ஆராய்ச்சி படிப்புகளை தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News