Wednesday, July 11, 2018

எம்.பி.பி.எஸ்.: சிபிஎஸ்இ முடிவைப் பொருத்தே அடுத்தகட்ட செயல்பாடு: தமிழக அரசு

தமிழில் நீட் தேர்வெழுதி மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவைப் பொருத்தே தமிழக அரசின் செயல்பாடு அமையும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்.-பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுபெற்று, தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறை புதன்கிழமையுடன் (ஜூலை 11) நிறைவடைகிறது.

கூடுதல் தேர்ச்சி: இந்நிலையில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. 

தமிழகத்தில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதியுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின்படி, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டால் குறைவான தேர்ச்சி மதிப்பெண் உடையோருக்கு அதிக மதிப்பெண் கிடைப்பது மட்டுமின்றி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத பல மாணவர்கள் கருணை மதிப்பெண் மூலம் தேர்ச்சியடைந்து, மருத்துவத் தரவரிசையில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.



சிபிஎஸ்இ மேல் முறையீடு: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நிறைவடையும் தருணத்தில் உள்ளது. பிற மாநிலங்களிலும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை நீதிமன்றத் தீர்ப்பின்படி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டால் அகில இந்திய அளவிலான நீட் தரவரிசையில் பெரும் மாற்றம் ஏற்படும். 

இதனால், அகில இந்திய கலந்தாய்வில் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் நடைபெறும் கலந்தாய்விலும் குழப்பங்கள் ஏற்படும். எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோரி சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் நிலை: தமிழக இடங்களுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. முதல் கட்டக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. 

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழக அரசின் நிலை என்ன என்று மாணவர்களிடமும், பெற்றோரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



அரசு அதிகாரி தகவல்: இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது: 

இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இயின் அடுத்தகட்ட முடிவுக்குப் பின்னரே தமிழக அரசின் செயல்பாடு குறித்து முடிவு செய்ய முடியும். ஏனென்றால் நீட் தரவரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டியது சிபிஎஸ்இ தான்.
நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, குறித்த தேதியில் நடைபெறுமா என்பது குறித்தும் தற்போது எதுவும் கூற முடியாது என்றார் அவர்.



Popular Feed

Recent Story

Featured News