Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 4, 2018

மாணவர்களுக்கு வீட்டுப் பாடம்: தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நீதிமன்ற உத்தரவை மீறி, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் வீட்டுப் பாடங்கள் கொடுப்பதா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப்பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.




எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, பல தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பதாக புகார்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

Popular Feed

Recent Story

Featured News