Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தும் ஓய்வுபெற்ற ஆசிரியர்

ஓய்வுபெற்ற பிறகும் 60 வயதில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று இலவச வகுப்பு எடுத்து சொற்பொழிவு ஆற்றும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர் சாகுல் அமீது, மாமல்லபுரம் நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் வகுப்பெடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 



திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது(60). அவர் திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தற்போது தனது ஓய்வுக் காலத்தை வீணடிக்காமல் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கூறியும், பாடல்கள் மூலமாக கருத்துகளைக் கூறியும் மாணவர்களை உற்சாகமூட்டி நீதிபோதனை வகுப்புகளை நடத்தி வருகிறார். 

அவர் பாடல்களுடன் பல்வேறு சமூகக் கருத்துகள்அடங்கிய கதைகளை, நகைச்சுவையுடன் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறும்போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்கின்றனர்.



இந்நிலையில், மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.சேரன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சாகுல் அமீதை தனது பள்ளிக்கு வருமாறு அழைத்திருந்தார். அதையேற்று, அப்பள்ளிக்கு வந்த சாகுல் அமீதை தலைமை ஆசிரியர் வரவேற்றார்.
அதைத் தொடர்ந்து, சமூக நல்லிணக்கக் கருத்துகள், இதிகாசக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், தமிழ் சார்ந்த கருத்துகள், ஒழுக்கத்திற்கான கதைகள் மற்றும் கருத்துகளைக் கூறி 3 மணி நேரம் வகுப்பெடுத்தார். 

அவரை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி கெளரவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

அதன் பின்னர் ஆசிரியர் சாகுல் அமீது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

நான் ஓய்வு பெற்ற பின் வீட்டில் அடைப்பட்டுக் கிடக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களை எவ்வாறெல்லாம் முன்னேற்ற முடியுமோ, நல்வழியில் கொண்டு செல்ல முடியுமோ அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதுவரை திருவாரூர், திருச்சி, நாகை, வேலூர், கரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு பேருந்து மூலமாகவே சென்று வகுப்பு எடுத்துள்ளேன். 

பல்வேறு அரசுப் பள்ளிகளில் தமிழ் சார்ந்த சீர்திருத்தக் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் ராமாயணம், மகாபாரதம், நீதிபோதனைக் கதைகள், நல்லிணக்கக் கருத்துகள், சமூகக் கருத்துகளைக் கூறி வருகிறேன். அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு இந்தப் பணியை எந்தவித எதிர்பார்ப்புமின்றி மனதார செய்து வருகிறேன். 



நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்ச் சங்க காலப் பாடல்களை மாணவர்களுக்கு கூறி வகுப்பெடுப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பள்ளியின் சார்பில் ஆசிரியர் சாகுல் அமீதை பாராட்டி, வழியனுப்பி வைத்தனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்