Saturday, July 7, 2018

இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு:

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை அறிவித்தார்.




அவர் மேலும் கூறியதாவது, அனைத்துப் போட்டித் தேர்வுகளையும், அதாவது நீட், ஜேஇஇ மெயின், யுஜிசி மெயின், மேட் போன்ற தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமையே நடத்தும்.

இனி அனைத்துத் தேர்வுகளும் கணினி மூலம் நடத்தப்படும். கணினி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்.

நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். ஒரு மாணவர் ஒரு ஆண்டில் நடக்கும் ஒரு தேர்வையோ அல்லது இரண்டு தேர்வுகளையோ எழுதலாம். இந்த இரண்டு தேர்வுகளில் எந்த மதிப்பெண் அதிகமோ அது கருத்தில் கொள்ளப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வு ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் என இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். கணினி மயமாக்கப்பட்ட தேர்வு மையங்களும், தேர்வுக்கான தேதிகளும் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

2 கட்டங்களாக நடத்தப்படுவதால், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவும். ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் தேர்வெழுதும் நிலை தவிர்க்கப்படும்.



ஏதேனும் ஒரு தேர்வை தேந்தெடுத்து மாணவர்கள் எழுதலாம். இரண்டு தேர்வுகள் எழுதினாலும், அதில் சிறந்த மதிப்பெண்ணை தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் முழுவதும் கணினி முறையில் நடத்தப்படும் என்பதால், வெளிப்படைத் தன்மை இருக்கும். பாடத்திட்டம், தேர்வுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்

Popular Feed

Recent Story

Featured News