Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 6, 2018

எம்.பி.பி.எஸ்.: அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் இடங்கள் நிரம்பின

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை நிரம்பின.

தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 1,900-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.




காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) ஆகிய பிரிவினருக்கான அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பின.

தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் மட்டுமே இந்தப் பிரிவினருக்கு காலியாக இருந்தன.

பெற்றோர் வாக்குவாதம்: இதன் காரணமாக அனைத்துப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளில் எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெறுவதற்காக காத்திருக்கும் மாணவர்களைத் திரும்பச் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விதிமுறைகளின்படி, முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காத மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியும். முதல் கலந்தாய்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாம் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.



முதல்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் ஒரு விண்ணப்பத்தில் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, அதில் காத்திருப்புப் பட்டியல் என்று குறிப்பிட்டுச் சமர்ப்பிப்பர்.

ஆனால் வியாழக்கிழமை அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் அதிகாரிகள் விண்ணப்பம் வழங்கி அதில் காத்திருப்புப் பட்டியல் என்று எழுதி வாங்காமல் அவர்களை அனுப்ப முயற்சித்தனர்.
அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு...: இதனையடுத்து அங்கு திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனையடுத்து தரவரிசை எண் 2802-க்கு மேல் உள்ள அனைத்துப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணையின்படி அவர்கள் அனைவரும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் அங்கு திரண்டிருந்தவர்கள் கலந்து சென்றனர். இது தொடர்பான அறிவிப்பு தேர்வுக்குழுவின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

நிரம்பி வழிந்த கூட்டம்: வழக்கத்தைவிட கலந்தாய்வுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்ததால் கலந்தாய்வு நடைபெற்ற ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகமே நிரம்பி வழிந்தது.

காத்திருப்பதற்காக மருத்துவமனையின் வெளியே அமைந்திருந்த அரங்கத்தில் இடம் கொள்ளாமல், மக்கள் ஆங்காங்கே நிழல்களைத் தேடி தஞ்சமடைந்தனர். மருத்துவமனை வாயிலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் உள்ளே செல்வதற்கு சிரமப்பட்டனர்.
ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே நுழைவதற்கும் நோயாளிகளை அதிலிருந்து இறக்குவதற்கும் கூட சிரமம் ஏற்பட்டது.
இன்றைய கலந்தாய்வு: அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அழைக்கப்பட்டதால் இரவு 9 மணிக்கும் மேல் கலந்தாய்வு நீடித்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அனைத்துப் பிரிவினருக்கான தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



கலந்தாய்வு இடத்துக்கு வரவழைக்கப்பட்ட சிறப்பிட மாணவர்!
தமிழக தரவரிசையில் இரண்டாவது இடமும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இடத்தைப் பெற்ற முதல் மாணவருமான ராஜ் செந்தூர் அபிஷேக் இரண்டு மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது ஆவணங்களைச் சரிபார்த்தபோது தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் அவர் விண்ணப்பிக்காதது தெளிவானது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் செந்தூர் அபிஷேக் பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்தார். அதற்குப் பிறகு பிளஸ் 1, 2 ஆகிய வகுப்புகளை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் படித்தார். இவர் நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று, தமிழக தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

முதலிடம் பிடித்த மாணவி கலந்தாய்வில் பங்கேற்காததால், அனைத்துப் பிரிவினருக்கான முதல்நாள் கலந்தாய்வில் முதல் நபராக சென்னை மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்தார். இந்நிலையில் அவரது பெயர் ஆந்திர மாநிலத்தின் தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து புகாரின் மீது விசாரணை நடத்துவதற்கு கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு மாணவர் வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறுகையில், மாணவரின் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து விட்டோம். ஆந்திர மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடமும் விசாரித்துவிட்டோம்.

ராஜ் செந்தூர் அபிஷேக் என்ற மாணவர் தமிழக இடங்கள் மற்றும் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளார். எனவே, அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.



Popular Feed

Recent Story

Featured News