Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 6, 2018

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி: பேரவையில் மசோதா நிறைவேறியது

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் மசோதா பேரவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக எதிர்ப்புத் தெரிவித்தது.

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதிக்க வகை செய்யும் மசோதாவை, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சட்டக் கல்லூரியை நிறுவிடக் கருதும் தனிநபர்கள் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பி டம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, தனிநபர் சட்டக் கல்லூரி நிறுவுவதற்கென ரூ.30 லட்சத்துக்கு அறக்கட்டளை நிதியை உருவாக்க வேண்டும். கற்பித்தலுக்கான நூலகம், மாதிரி நீதிமன்றம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.



தனிநபர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் விவரங்கள், சட்டப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள விதிகள், வழிகாட்டு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். பரிசீலனைக்குப் பிறகு, கல்லூரி நிறுவுவதற்கான அனுமதியை வழங்கலாம் அல்லது மறுக்கலாம்.

அரசு கல்லூரிகள்: அரசால் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டுள்ள மாவட்டங்களில், தனிநபர் யாரும் சட்டக் கல்லூரியைத் தொடங்க அனுமதி இல்லை என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக எதிர்ப்பு-அமைச்சர் விளக்கம்: இந்த மசோதாவுக்கு திமுக அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. மசோதா விவாதத்துக்கு வந்த போது அந்தக் கட்சியின் உறுப்பினர் மதிவாணன் பேசுகையில், கல்லூரிகளில் தகுந்த உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், தமிழில் பாடத்திட்டம், நூலகம் போன்றவற்றை அமைத்திட சரியான நிபந்தனைகளை விதிக்க வேண்டும். போலி வழக்குரைஞர்கள் வராமல் தடுக்க வேண்டும் என்றார்.



இதற்கு சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளிக்கையில், தனியார் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், அந்தக் கல்லூரிகளை முறைப்படுத்தும் வகையில் நிபந்தனைகளை விதித்து, சட்டம் கொண்டு வந்துள்ளோம் என்றார். அதன் பின், சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Popular Feed

Recent Story

Featured News