Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 3, 2018

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் ஒரு சதவீதம் தள்ளுபடி- தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 3 கோடி மின்இணைப்புகள் உள்ளன. இதில், 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின்இணைப்புகளும் 21 லட்சம் விவசாய மின்இணைப்புகளும் 3லட்சம் தொழிற்சாலை மின்இணைப்புகளும் 30 லட்சம் வர்த்தகநிறுவனங்களுக்கான மின்இணைப்புகளும் அடங்கும்.



இந்நிலையில், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு மின்கட்டணத் தொகையில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த பிறகு, மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி வருகிறது.தற்போது, குறைந்தழுத்த மின்சாரத்தை உபயோகிக்கும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூலம் மாதம்தோறும் ரூ.35 ஆயிரம் கோடி மின்கட்டணமாக வசூல் ஆகிறது. உயரழுத்த மின்சாரத்தை உபயோகிக்கும் 9,500 தொழிற்சாலை மின்இணைப்புகள் மூலம் மாதம்தோறும் ரூ.750 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை வசூல் ஆகிறது.

மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு மின்வாரிய அலுவலகங்களில் பணம், காசோலை அல்லது வரைவோலையாக செலுத்தலாம். தேர்வு செய்யப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், வங்கிக் கிளைகள், மொபைல் போன் வங்கி சேவை ஆகியவை வழியாகவும் இணையதளம் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும், தானியங்கி மின் கட்டணஇயந்திரம் மூலமாகவும் செலுத்தலாம். குறிப்பிட்ட சில செல்போன் சேவைகள் வழியே, மொபைல் போனிலும் செலுத்தலாம்.மின்வாரிய அலுவலகங்களில் செலுத்துவதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன.




மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.தற்போது, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது.

இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும், மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் மின்வாரியம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.இதன்படி, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் இருந்து ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.ஆன்லைன் வழியாக மின்கட்டணம் செலுத்துவதன் மூலம், மின்வாரிய அலுவலகங்களில், நுகர்வோர் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும். ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க கவுன்ட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தலாம்.

முறைகேடு செய்ய வாய்ப்பு



அத்துடன், பணம் செலுத்தும் போது அதில் கள்ளநோட்டுகள் இடம் பெற வாய்ப்புள்ளது. காசோலை வசூலாக 3 முதல் 5 நாட்கள் ஆகும். அதனால், மின்வாரியத்துக்கு வட்டி இழப்பு ஏற்படுகிறது. அத்துடன், வசூலிக்கப்படும் மின்கட்டணத் தொகையில் ஊழியர்கள் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது.ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகள் நிகழாது. மேலும், இந்தக் கட்டண தள்ளுபடி சலுகை குறைந்தழுத்த மின்நுகர்வோர்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News