Wednesday, August 1, 2018

எம்.பி.பி.எஸ். வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்க உள்ளன. 



எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல், 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 3501 மற்றும் 1198 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. 

அகில இந்திய கலந்தாய்வுக்கு மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தடைவிதித்துள்ளதால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவையும், நிரம்பாத மீதம் இடங்களை அந்தந்த மாநிலத்துக்கு சமர்ப்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு: அதே நேரத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 30) தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளம், தெலுங்கைத் தாய்மொழியாகப் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிறுபான்மையின மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 




மாலையில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியின் 84 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

பெற்றோர் வாக்குவாதம்: 84 இடங்களுக்கு சுமார் 2,500 பேர் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நீட் தேர்ச்சி மதிப்பெண்ணுடன், கிறிஸ்தவ தேவாலயங்களின் நிதியளிப்பைப் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். 

குறைவான எண்ணிக்கையான இடங்களுக்கு அதிகமானோரை அழைத்ததற்காகவும், பிற மாநில மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் கூறி சில பெற்றோர் கலந்தாய்வில் பங்கேற்றிருந்த கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் விதிகளின்படியே ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் அழைக்கப்பட்டனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனுப்பிய நிதியளிப்புப் பட்டியலின் அடிப்படையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

மாணவர்கள் தேர்வுமுறை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது. இடங்களைப் பெறும் மாணவர்களின் விவரங்களும் திரையில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டோரிடம் கல்லூரி நிர்வாகத்திடம்
 பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் கலைந்து சென்றனர். அதிக எண்ணிக்கையிலானோர் அழைக்கப்பட்டிருந்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.



வகுப்புகள் தொடக்கம்: இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுôரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, புதன்கிழமை வகுப்புகள் தொடங்க உள்ளன. முதலாமாண்டு மாணவர்களை மூத்த வகுப்பு மாணவர்கள் வரவேற்பர். அவர்களுக்கான அறிமுகக் கூட்டம் கல்லூரிகளில் நடைபெறும்.

Popular Feed

Recent Story

Featured News