Thursday, July 12, 2018

அகில இந்திய எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முடிவு இன்று வெளியீடு

அகில இந்திய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.



அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் (இ.எஸ்.ஐ.,) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது.

முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவில் 12,683 இடங்கள் நிரம்பின. முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், கைவிடப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

அதற்கான முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக் கடிதத்தையும் மாணவர்கள் இதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேருவதற்கு ஜூலை 22-ஆம் தேதி கடைசியாகும். கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் ஜூலை 23 -ஆம் தேதி அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கே திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News