Thursday, July 12, 2018

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.




ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.61 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும்.



1, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கணினி வழியில் பயிலும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகின்றன. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.500 கோடியில் இணையதள வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு அனைத்துப் பாடங்களும் புதிய பாடத் திட்டங்களாக மாற்றப்பட உள்ளது. ஆகையால், சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 600 பயிற்சியாளர்களை வரவழைத்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்துகிறது.



பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டிலிருந்து 1,000 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News