Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

தைராய்டு பற்றியும் அதன் சோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த பதிவு


தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது. நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம்.

தைராய்டு ஹார்மோன்கள்



'தைராக்சின்' (T4), 'டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களை இது சுரக்கிறது. இப்படிச் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவை. இந்த இரண்டு ஹார்மோன்கள் பெரும்பாலும் புரதத்துடன் இணைந்திருக்கும். சிறிதளவு ஹார்மோன்கள் புரதத்துடன் இணையாமலும் இருக்கும். அவற்றுக்கு FT3, FT4 என்று பெயர். இவை உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற ‘தைராய்டு ஊக்கி ஹார்மோன்' (TSH) கட்டுப்படுத்துகிறது.

குறை தைராய்டு

தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதைக் 'குறை தைராய்டு’ (Hypothyroidism) என்கிறோம். இதன் ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும்; செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கும்; முடி கொட்டும்; இளநரை தோன்றும்; தோல் வறட்சி ஆகும்; பசி குறையும். ஆனால், உடல் எடை அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.

தைராய்டு வீக்கம்

உண்ணும் உணவில் உடலின் தேவைக்கு ஏற்ப அயோடின் சத்து கிடைக்காவிட்டால், தைராய்டு சுரப்பி தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் சுரக்கத் தூண்டும். ஆனாலும், அதனால் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. பதிலாக, அது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று வீங்கிவிடும். அதற்கு 'முன்கழுத்துக் கழலை' (Goitre) என்று பெயர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாகத் தைராய்டு சுரப்பியில் அழற்சி (Thyroiditis) ஏற்பட்டு வீக்கமடைவதும் உண்டு. இது ஒரு தன்தடுப்பாற்றல் நோயாகவும் (Auto immune disease), கட்டியாகவும் (Thyroid adenoma) ஏற்படலாம்.

மிகைத் தைராய்டு

தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக வீக்கமடைந்து அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் சுரப்பு பல மடங்கு அதிகரித்துவிடும். இந்த நிலைமையை ‘மிகை தைராய்டு' ( Hyperthyroidism ) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும்; நாடித்துடிப்பு அதிகரிக்கும்; விரல்கள் நடுங்கும்; உள்ளங்கை வியர்க்கும்; அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழியும்; சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும்.

பரிசோதனைகள் என்ன?

வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH, FT3, FT4 , anti TPO ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். பொதுவாக T3 0.7 2 .04 ng/dL என்ற அளவிலும், T4 4.4 11.6 ng/dL என்ற அளவிலும் TSH 0.28 6.82 IU/dL என்ற அளவிலும் FT3 1.4 - 4.2 pg/dL, FT4 0.8 2 ng/dL இருக்க வேண்டும்.

இந்த இயல்பு அளவுகள் ஆய்வகத்தைப் பொறுத்தும், நோயாளியின் நோய்நிலை, அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், வயது, கர்ப்பம், வயது ஆகியவற்றைப் பொறுத்தும் சிறிதளவு மாறலாம். எனவே, நோயாளியானவர் தான் எடுத்துக்கொள்ளும் மருந்து விவரத்தையும் கர்ப்பமாக இருந்தாலும் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.



முடிவுகள் எப்படி இருக்கும்?

l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் குறைவாகவும், TSH அளவு அதிகமாகவும் இருக்கும்.

l மிகை தைராய்டு உள்ளவர்களுக்கு T3, T4 அளவுகள் அதிகமாகவும், TSH அளவு குறைவாகவும் இருக்கும்.

l இந்த மூன்று அளவுகளும் குறைந்திருந்தால், முன்பிட்யூட்டரி சுரப்பியில் குறைபாடு உள்ளது என்று பொருள்.

l சிலருக்குக் குறை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு அதிகமாக இருக்கும்.

l சிலருக்கு மிகை தைராய்டு பிரச்சினை உடலில் இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. இவர்களுக்கு T3, T4 அளவுகள் சரியாக இருக்கும். TSH அளவு குறைவாக இருக்கும்.

l FT3, FT4 அளவுகள் அதிகமானால் மிகை தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.

l குறை தைராய்டு உள்ளவர்களுக்கு ரத்த ஹீமோகுளோபின் அளவு குறைவாகவும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும் இருக்கும்.

l anti TPO பரிசோதனை ‘பாசிட்டிவ்’என்றால் முன்கழுத்துக் கழலைக்குக் காரணம் தன்தடுப் பாற்றல் நோய் என்றும், ‘நெகட்டிவ்’என்றால் சாதாரணக் கழலை என்றும் அறிய உதவும்.