Friday, July 13, 2018

சமநிலை இணையம் நடைமுறை தொடர்பான டிராய் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

தகவல் தொழில்நுட்பத்தில் எவ்வித பாரபட்சமும் இன்றி இணைய சேவை வழங்குவதை உறுதிசெய்யும் சமநிலை இணையம்
என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தகவல் போக்குவரத்தில் வேகம், கட்டணம் விதிப்பதில் பாரபட்சம் இன்றி இணைய சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நடைமுறையே சமநிலை இணையமாகும்.



இந்நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைகள் அடிப்படையில் சமநிலை இணையத்திற்கு மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இணையத்தின்வழி மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தையும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒரேமாதிரியாகக் கையாள வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

இதையடுத்து வேகத்தை குறைப்பது அல்லது வேகத்தை அதிகரிப்பது, பிளாக் செய்வது போன்ற வேலைகளில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஈடுபட முடியாது. மேலும் பயனாளர், இணைய தளத்தை பொறுத்தோ அல்லது பயன்படுத்தப்படும் மென்பொருள்களைப் பொறுத்தோ பாரபட்சம் காட்டக் கூடாது என்பது கட்டாயாமாகும்.

அண்மையில் சமநிலை இணையம் தொடர்பான விதிகள் அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலம் அமெரிக்காவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தகவல் போக்குவரத்தின் வேகத்தை குறைக்கவோ, கூட்டவோ முடியும்.



ஆனால் இந்தியாவில் சமநிலை இணையம் என்பதை கொண்டுவந்திருப்பதன் மூலம் பாரபட்சமற்ற தகவல் போக்குவரத்திற்கு வழிசெய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொலைத்தொடர்பு உரிமங்களுக்கான விதிகளில் சமநிலை இணையம் தொடர்பான விதிகளையும் மத்திய அரசு விரைவில் இணைக்க உள்ளது. மேலும் தொலைத்தொடர்பு மருத்துவம், தானியக்க வாகனங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட மிகமுக்கியமான சில சேவைகளுக்கு மட்டும் சமநிலை இணையம் என்ற வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News