Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 23, 2018

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை திரும்பக் கிடைக்குமா?

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கச் செலுத்தப்படும் முன்வைப்புத் தொகை, மாணவர் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப விகித அடிப்படையில் திரும்ப அளிக்கப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:



முன்வைப்புத் தொகை செலுத்த நாளை கடைசி: தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் முன்வைப்புத் தொகை (பொதுப் பிரிவினர்-பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.5,000; எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.1,000) செலுத்த வேண்டும்.

10,000 மாணவர்கள்: கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 190 வரை முதல் சுற்று பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுப் பட்டியலில் சுமார் 10,000 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடைமுறை வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுவரை 3,000 மாணவர்கள்... கலந்தாய்வுக்கான முன்வைப்புத் தொகையை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் செலுத்தியுள்ளனர். முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு மாணவர்கள் முன்வைப்புத் தொகையை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூலை 24) செலுத்த வேண்டும். 

முன்வைப்புத் தொகையை இணையதளம் மூலம் செலுத்துவோர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரையிலும் வரைவோலையாக பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் செலுத்துவோர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.



செலுத்தத் தவறினால்... முதல் சுற்று கலந்தாய்வு பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் முன்வைப்புத் தொகையை செவ்வாய்க்கிழமைக்குள் செலுத்தத் தவறினால், இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில்தான் கட்டணம் செலுத்த முடியும். அப்படிக் கட்டணத்தைச் செலுத்தி இரண்டாவது சுற்று கலந்தாய்வில் (கட்-ஆஃப் மதிப்பெண் 175 முதல் 190 வரை) பங்கேற்கலாம்; ஆனால், அப்போது காலியாக உள்ள பொறியியல் இடங்களைத் தான் தேர்வு செய்யும் நிலை ஏற்படும். எனவே, அந்தந்த சுற்று ஆன்லைன் கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்டுள்ள உரிய காலக்கெடுவுக்குள் கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்துவது அவசியம்.

திரும்பக் கிடைக்குமா?: பி.இ. இடத்தைத் தேர்வு செய்து விட்டு, அதை உறுதி செய்யாத நிலையில் முன்வைப்புத் தொகை முழுமையாக திரும்ப அளிக்கப்படும். ஆனால், இடத்தை உறுதி செய்து விட்டு தேர்வு செய்த பொறியியல் கல்லூரியில் சேராவிட்டால், 80 சதவீத முன்வைப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும். 

ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள் முடிந்த பிறகு, முன்வைப்புத் தொகையை திரும்ப அளிக்கும் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால்... ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் கல்லூரியில் பி.இ. சேரும்போது, குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தில் முன்வைப்புத் தொகை கழித்துக் கொள்ளப்படும். இதற்கான அறிவுறுத்தல்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன என்றார் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை மாணவர்கள்?

முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் சுமார் 10,000 மாணவர்கள், இரண்டாவது சுற்றில் சுமார் 20,000 மாணவர்கள், மூன்றாவது சுற்றில் 25,000 மாணவர்கள், நான்காவது சுற்றில் 25,000 மாணவர்கள், ஐந்தாவது சுற்றில் மீதமுள்ள சுமார் 26,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெறுவர் என்றார் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.