Saturday, July 14, 2018

வானில் இரண்டு அரிய நிகழ்வுகள்!



வானில் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வது சாதாரணமான விஷயம்தான். ஆனால், தற்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வானில் இரண்டு அதிசய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஒரே மாதத்தில் இரண்டு ப்ளூ மூன்கள் தோன்றுவது, செவ்வாய் கோள் பூமிக்கு அருகில் வருவது ஆகியவையே அந்த இரு நிகழ்வுகள்



ப்ளூ மூன்

அது என்ன ப்ளூ மூன், ஊதா நிறத்தில் தெரியுமா எனக் கேட்கலாம். ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி நிலவுதான் ப்ளூ மூன் எனப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கமான ஜனவரி 31ஆம் தேதி ப்ளூ மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 150 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படும். ஜனவரி மாதத்தையடுத்து மார்ச் மாதம் மீண்டும் ஒரு ப்ளூ மூன் தோன்றியது. ஒரு வருடத்தில் இரண்டு ப்ளூ மூன்கள் தோன்றுவது மிகவும் அரிது. அடுத்து இது போன்ற இரண்டு ப்ளூ மூன்கள் இனி 2037ஆம் ஆண்டில் மட்டுமே தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ப்ளூ மூன் என்பது அரிதாக இருப்பதாலேயே Once in a blue moon என்று அரிய விஷயங்களைக் குறிப்பிடும் மரபுத்தொடர் ஒன்று ஆங்கிலத்தில் உருவானது.



செந்நிற நிலவும் நெருங்கி வரும் செவ்வாயும்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் அபூர்வ நிகழ்வாக வருகின்ற ஜூலை 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 82 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்தச் சந்திர கிரகணம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடிக்குமாம். இந்த கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்குமாம். இதனை இந்தியாவில் வெறும் கண்களால் பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 27ஆம் தேதி தெரியும் சந்திரகிரகணம் இரவு 11.54 மணிக்குத் துவங்கி, ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1.52 வரை நீடிக்கும்; 1 மணி 43 நிமிடங்கள் நீடித்து முழு சந்திர கிரகணமாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ரத்த நிறத்தில் சிவப்பாக முழு நிலவு தோன்றி அதிகாலை 2.43 மணிக்குத் தெரியும் என்றும், அப்பொழுது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



சந்திர கிரகணம் நடப்பதும் சிவப்பு நிலா தோன்றுவதும் இயல்புதானே என கூறலாம். ஆனால், இந்தச் சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் அதாவது வருகிற 31ஆம் தேதி பூமிக்கு மிக நெருக்கமாக செவ்வாய் கிரகம் வரக்கூடிய சூரிய நிகழ்வும் நடக்க உள்ளது. சூரியன், செவ்வாய் கிரகங்களுக்கு நடுவே பூமி வரும் நிகழ்வானது 26 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. அதே நேரத்தில் செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வரக்கூடிய நிகழ்வு 15 அல்லது 17 வருடத்துக்கு ஒருமுறை நிகழும் இந்த நிகழ்வுதான் வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முறை வழக்கத்தைவிட பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வரவுள்ளது. அதாவது பூமிக்கு 4ஆவது இடத்தில் இருக்கும் செவ்வாய் கோளானது பூமிக்கு 57.6 மில்லியன் கி.மீ தொலைவிற்கு வரவுள்ளது. இதற்குமுன் கடந்த 2003ஆம் ஆண்டு செவ்வாய் கோள் பூமிக்கு அருகில் 55.7 மில்லியன் கி.மீ தொலைவில் வந்தது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பூமியை செவ்வாய் நெருங்கும் நிகழ்வை டெலஸ்கோப் உதவியுடனோ, வெறும் கண்களாலோ பார்க்க முடியும். அப்போது செவ்வாய் அளவில் பெரியதாகவும், வெளிச்சமாகவும் காட்சியளிக்கும்.



அடுத்ததாக பூமியை செவ்வாய் கிரகம் நெருங்கும் நிகழ்வு 2020ஆம் ஆண்டுதான் நடக்கும். அப்போது பூமியிலிருந்து செவ்வாய் 61.76 மில்லியன் கி.மீ. தொலைவில் இருக்குமாம். 2003ஆம் ஆண்டைப் போல் பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் வரும் அரிய நிகழ்வு இனி 2287ஆம் ஆண்டுதான் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Popular Feed

Recent Story

Featured News