Wednesday, August 1, 2018

இணையத்தின் மூலம் சான்றிதழ்களுக்கு சான்றொப்பம் பெறும் வசதி: மருத்துவ பல்கலை.யில் தொடக்கம்

மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்திலேயே சரிபார்க்கவும், சான்றொப்பம் பெறும் வகையிலான புதிய வசதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 



வெளிநாடுகளுக்கு படிக்க அல்லது பணிபுரிய செல்வோரின் சான்றிதழ்கள் மத்திய வெளியுறவுத் துறையால் சான்றொப்பமிட வேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாநில அரசு, குறிப்பிட்ட நபர் படித்த பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள் அந்த சான்றிதழ்களைச் சான்றொப்பமிட்ட பிறகே மத்திய வெளியுறவுத் துறையில் சான்றொப்பம் பெற முடியும். சான்றிதழ்கள் சரிபார்ப்பு, சான்றொப்பம் ஆகியவற்றை இணையதளத்திலேயே பெறும் வகையில் மத்திய அரசு ஈ-சனத்' (E-Sanad) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் பயனாளிகள் விரைவாகவும், செலவில்லாமலும் சான்றிதழ்களை சான்றொப்பம் பெற முடியும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் இச்சேவை திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.



பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி சேவையைத் தொடங்கி வைத்தார். தேசிய தகவலியல் மையத்தின் தலைமை இயக்குநர் நீத்தா வர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News