Sunday, July 15, 2018

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சைதை துரைசாமி மனிதநேய மையத்தில் படித்த 55 பேர் தேர்ச்சி பெற்றனர்.




ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மொத்தம் 782 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 6–ந்தேதி வரை விண்ணப்பிக்க தேர்வர்களை அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு கடந்த மாதம் (ஜூன்) 3–ந்தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 72 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.



இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. www.upsc.gov.in, www.upsconline.nic.in என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்துக்கு சென்று தேர்வர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நேற்று வெளியிடப்பட்ட முதல்நிலை தேர்வில் சைதை துரைசாமி மனிதநேய பயிற்சி மையத்தில் இலவசமாக படித்து தேர்வு எழுதியவர்களில் 55 பேர் (32 ஆண்கள், 23 பெண்கள்) தேர்ச்சி பெற்றுள்ளதாக மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக மனிதநேய பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும், முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. மனிதநேயத்தில் பயிற்சி பெறாத பிற மாணவர்களும் இந்த பயிற்சியில் கலந்து பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் ‘28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை’ என்ற முகவரியில் உள்ள மனிதநேய பயிற்சி மைய அலுவலகத்துக்கு நேரில் வந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் இடம், உணவு, போக்குவரத்து வசதி ஆகியவை இலவசமாக செய்து தரப்படும்.



முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் அடுத்ததாக முதன்மை தேர்வை எழுத வேண்டும். முதன்மை தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 28–ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 28, 29, 30 மற்றும் அக்டோபர் 6, 7 ஆகிய 5 நாட்கள் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வை எதிர்கொள்வார்கள்.

Popular Feed

Recent Story

Featured News