Thursday, July 12, 2018

நீட் தேர்வு விவகாரம்: சிபிஎஸ்இ முடிவின் அடிப்படையில் நடவடிக்கை

நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) முடிவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் வழங்கப்படும்

இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக பல்கலைக்கழக சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.


இதில் பி.ஏ.-எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.பி.ஏ.-எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம்.-எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பிசிஏ-எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய நான்கு படிப்புகளின் கீழ் உள்ள 624 இடங்களுக்கு இந்த சேர்க்கை நடைபெறுகிறது.



பல்கலைக்கழகத்தின் பசுமை வழிச் சாலை வளாகத்தில் நடைபெற்ற கலந்தாய்வை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்து, இடங்களைத் தேர்வு செய்த முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை அரசு சட்டக் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சென்னையை அடுத்த புதுப்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர் ஆகிய இரண்டு இடங்களில் கல்லூரி, விடுதியும் கட்டப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது.

நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவைப் பொருத்தவரை, சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.



Popular Feed

Recent Story

Featured News