Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

ஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம் :

பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அதிகாரத்தை, இணை இயக்குனர்களுக்கு வழங்கி, நிர்வாக சீர்திருத்தத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி, மே மாதம் முதல், நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகிய பதவிகள், ரத்து செய்யப்பட்டன.



பள்ளி நிர்வாகம் ஒரே குடையின் கீழ் இருக்கும் வகையில், அனைத்து வகை, தொடக்க, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகங்கள், பள்ளிக் கல்வியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.இ.ஓ., என்ற, முதன்மை கல்வி அதிகாரி - வருவாய் மாவட்ட நிர்வாக அதிகாரியாகவும், அவருக்கு கீழ், டி.இ.ஓ., என்ற மாவட்ட கல்வி அதிகாரி, அவருக்கு கீழ், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி என, பொறுப்புகள் வழங்கப்பட்டன.இந்த அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட, அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின்படி, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல் வழங்குவது போன்ற அதிகாரங்களும், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டன. இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு பணி வழங்கப்பட்டது.சி.இ.ஓ.,க்களிடம் அதிகாரங்களை குவித்திருப்பது, சில நேரங்களில் முறைகேடுகளுக்கு வாய்ப்பாகி விடும் என, புகார்கள் எழுந்தன.
இதை தொடர்ந்து, நிர்வாக சீர்திருத்தத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ளார்.இதன்படி, பி.இ.ஓ.,க் களை நியமனம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், சி.இ.ஓ.,வுக்கு தரப்பட்டு உள்ளது. கல்வி மாவட்டத்திற்குள், ஆசிரியர்களை நியமித்தல், இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், டி.இ.ஓ.,க்களுக்கு தரப்பட்டுள்ளது.

ஒரே வருவாய் மாவட்டத்திற்குள் இருக்கும், ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து, இன்னொரு கல்வி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, சி.இ.ஓ.,வின் அதிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
வருவாய் மாவட்டம் விட்டு, இன்னொரு வருவாய் மாவட்டத்துக்கு, ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, இணை இயக்குனர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என, உத்தரவிடப்பட்டுள்ளது