Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 23, 2018

சொத்து வரி உயர்வு: புதிய அரசாணை வெளியீடு!

சொத்து வரி உயர்வு: புதிய அரசாணை வெளியீடு!

தமிழகத்தில்  சொத்து வரியை 50 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த முடிவு செய்து, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



1998ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 17ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சொத்து வரியை உயர்த்த இரண்டு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது குறித்த அறிக்கையை இரண்டு வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.



இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்குச் சொத்து வரி 50 விழுக்காடு உயர்த்தியும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 விழுக்காடு உயர்த்தியும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 விழுக்காட்டுக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தி வசூலிக்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி, 50 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை சொத்து வரி உயருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, தமிழக அரசு இந்த புதிய அரசாணையைச் சமர்ப்பிக்கவுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்