Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 4, 2018

கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டுப் போட்ட மாணவர்கள்

மரக்காணம் அருகே வசவன் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு பூட்டுப்போட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்.

மரக்காணம் அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை பூட்டி மாணவர்கள், பெற்றோர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வசவன்குப்பம் மீனவர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் பணிபுரிவதாகவும், அதிலும் தலைமை ஆசிரியர் கடந்த சில நாள்களாக விடுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ஆசிரியர் மட்டுமே கற்பித்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் ஆகவே, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்களும், பெற்றோரும் கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்காத பள்ளிக் கல்வித் துறையைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு பூட்டுப் போட்டு மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், இளஞ்செழியன், மரக்காணம் காவல் ஆய்வாளர் (பொ) மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Popular Feed

Recent Story

Featured News