Friday, August 10, 2018

இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக.14 முதல் விண்ணப்ப விநியோகம்

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 14-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெற உள்ளது.



சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் 6 அரசுக் கல்லூரிகள் உள்ளன. இது தவிர 23 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்...:இந்தப் படிப்புகளில் 2018-2019-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இப் படிப்புகளுக்கு 396 அரசு இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 916 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
 
இது தொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 



இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேடு விநியோகம் வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. விண்ணப்பப் படிவங்கள் சென்னையில் 3 கல்லூரிகள், பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம், கோட்டாறு ஆகிய இடங்களில் உள்ள 6 மருத்துவக் கல்லூரிகளில் விநியோகிக்கப்படும். நேரடி விண்ணப்ப விநியோகம் தவிர, www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
.
கட்டணம்: விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ.500 ஆகும். சிறப்புப் பிரிவினருக்கு ரூ.100 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப். 5-ஆம் தேதி பிற்பகல் 3 மணி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 



தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மத்திய அரசின் ஆயுஷ் துறையால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அரசு இடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

Popular Feed

Recent Story

Featured News