Tuesday, August 28, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரம், எஸ்.ஆர்.எம். தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் எஸ்.ஆர்.எம்.நைட்டிங்கேள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொன்விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, எஸ்.ஆர்.எம்.கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ஆர்.சிவகுமார் வரவேற்றார். 



விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

பள்ளி மாணவர்களின் கல்வித் திறனுடன், அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 12 வகை திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



தமிழகமெங்கும் முதல்கட்டமாக 3 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளன. நீட் தேர்வில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழகமெங்கும் 412 மையங்களில் 3,600 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.

Popular Feed

Recent Story

Featured News