Tuesday, August 7, 2018

2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் -மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர்.



ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து விசாரணையை இன்று தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.



இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேதல் ஆணையம் தாக்கல் செய்யவில்லை.

வார்டுகள் வரையறை செய்யப்பட்டு அரசுக்கு ஆகஸ்ட் 31-ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News