Wednesday, August 29, 2018

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!




பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News