Wednesday, August 29, 2018

உடல் எனும் இயந்திரம் : பாம்பைக் கண்டால் பயந்து ஓடுவது ஏன்?




தை
ராய்டு சுரப்பிக்குப் பின்புறத்தில் அதனோடு ஒட்டினாற்போல் அமைந்துள்ள சுரப்பிகளுக்கு ‘பாராதைராய்டு சுரப்பிகள்’ (Parathyroid glands) என்று பெயர். இவை பக்கத்துக்கு இரண்டு என மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. நான்கும் சேர்த்து 120 மி.கி. வரைதான் எடை இருக்கும்.
இந்தச் சுரப்பிகள் உடலில் இருப்பதை 1877-ல் முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் சுவீடனைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சேன்ட்ஸ்ட்ரோம் (Sandstrom).
இவை பார்ப்பதற்குச் சற்றே மஞ்சள் கலந்த மாநிறத்தில் ஒரு தீக்குச்சியின் தலை அளவுக்குத்தான் இருக்கின்றன. இவற்றில் ‘தலைமை அணுக்கள்’ (Chief cells), ‘உயிர்வளி அணுக்கள்’ (Oxyphil cells) என இரண்டு வகை உண்டு. அளவில் சிறிதாவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளவை தலைமை அணுக்கள். பெரிய அளவில் ஆங்காங்கே உள்ளவை ஆக்ஸிபில் அணுக்கள்.
தலைமை அணுக்கள் ‘பாராதார்மோன்’ (Parathormone) எனும் ஹார்மோனைச் சுரக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. இது சுரப்பது குறைந்து போனால், ரத்தத்தில் கால்சியத்தின் அளவு மிகவும் குறைந்து ‘டெட்டனி’ (Tetany) எனும் நோய் வரும். அப்போது கை, கால்களில் தசைகளும் நரம்புகளும் இழுத்துக்கொள்ளும். தசைகள் திடீரெனத் துடிக்கும். இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபட, கால்சியம் மிகுந்த பால் மற்றும் பால் தயாரிப்புகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.




பீனியல் சுரப்பி (Pineal gland)

மூளையில் ஒரு கூம்புபோல் அமைந்திருக்கும் சிறிய சுரப்பி இது. ஏழு வயதுவரை இது வளரும். பிறகு இதன் வளர்ச்சி குறைந்துவிடும். இதன் அணுக்களுக்கு இடையில் நிறைய கால்சியம் அயனிகள் காணப்படும். இதற்கு ‘பீக்ஷ்னியல் மணல்’ (Pineal sand) என்று பெயர்.
இதில் உள்ள அணுக்கள் ‘மெலடோனின்’ எனும் ஹார்மோனைச் சுரக்கின்றன. உடலுக்குள் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதற்கு ‘உயிர்க் கடிகாரம்’ (Biological clock) என்று பெயர். உடலில் காலை, மாலை, இரவு என நேரத்துக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலியல் செயல்பாடுகள் இந்தக் கடிகார முறைப்படி நிகழ்கின்றன. அதனால்தான் நாம் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட வேண்டும்; படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும்; உறங்க வேண்டிய நேரத்தில் உறங்க வேண்டும் என்று சொல்கிறோம். இந்த உயிர்க் கடிகாரத்தை ‘மெலடோனின்’தான் கட்டுப்படுத்துகிறது.

அண்ணீரகச் சுரப்பிகள்

இவை ‘அவசரக் காலச் சுரப்பிகள்’ (Emergency glands). இவற்றுக்கு ‘சுப்ரா ரீனல் சுரப்பிகள்’ (Supra renal glands) என்ற பெயரும் உண்டு. வலது பக்கம் ஒன்று, இடது பக்கம் ஒன்று எனச் சிறுநீரகத்தின் மேலாக, தொப்பிபோல் இரண்டு அண்ணீரகச் சுரப்பிகள் அமர்ந்திருக்கின்றன. இவற்றின் மொத்த எடை 10 கிராமுக்குள்தான் இருக்கும். பெண்களுக்கு இவை சற்றுப் பெரிதாக இருக்கும்.
ஒவ்வொரு சுரப்பியிலும் புறணி (Cortex), அகணி (Medulla) என இரு பகுதிகள் உண்டு. புறணி வெளிப்பக்கத்தில் உள்ளது. அகணி உள்பக்கத்தில் உள்ளது. புறணியானது அகணியைச் சூழ்ந்த மாதிரி அமைந்துள்ளது. இங்குதான் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்தச் சுரப்புகளை மொத்தமாக ‘கார்ட்டிகோஸ்டீராய்டுகள்’ (Corticosteroids) என்கிறோம். நமக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அதைத் தாங்கும் சக்தியைத் தருவது இவற்றின் முக்கிய வேலை.
புறணியில் மூன்று பாகங்கள் உள்ளன. வெளியிலிருந்து உள்ளாக அவை: 1. ஸோனா கிளாமிருலோசா (Zona glomerulosa), 2. ஸோனா ஃபேஸிகுலேட்டா (Zona Fasciculata), 3. ஸோனா ரெட்டிகுலாரிஸ் (Zona reticularis). முதலாவது பகுதியில் ‘மினரலோகார்ட்டிகாய்டுகள்’ (Mineralocorticoids) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆல்டோஸ்டீரோன் (Aldosterone). இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன். உடலில் தண்ணீரின் அளவைச் சமன்படுத்துவதும் இதுவே.
இரண்டாவது பகுதியில் சுரக்கப்படும் ‘குளுக்கோகார்ட்டிகாய்டுகள்’ (Glucocorticoids) எனும் ஹார்மோன்களில் ‘கார்ட்டிசால்’ முக்கியமானது. இது அவசரமான, பரப்பான சூழல்களில் உடலைச் சரியாகச் செயல்பட வைக்கும் ஹார்மோன். உடலில் எங்காவது அழற்சி தோன்றுமானால், அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இதற்கு உண்டு. மூன்றாவது பகுதியில் ஆன்ட்ரோஜன் (Androgen), ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) எனும் பாலுணர்வு ஹார்மோன்கள் சிறிதளவு சுரக்கின்றன.
அகணிப் பகுதியில் ‘கேட்டகாலமின்கள்’ (Catecholamines) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை அட்ரீனலின் (Adrenaline), நார் அட்ரீனலின் (Nor adrenaline) ஹார்மோன்கள். இவை எபிநெப்ரின் (Epinephrine), நார் எபிநெப்ரின் (Nor epinephrine) என்றும் அழைக்கப்படுகின்றன. அட்ரீனலின் ஹார்மோன் இதயத் துடிப்பு, தசை இயக்கம், நரம்புகள் இயக்கம், ரத்தக்குழாய் இயக்கம், சுவாசம், பார்வைத் திறன், போன்ற பலதரப்பட்ட பணிகளுக்கு நம்மைத் தயாராக்குகிறது. கொழுப்பு, மாவுச் சத்து ஆகியவற்றின் வளர்சிதை மாற்றப் பணிகளைப் பேணுவதும் ரத்தச் சர்க்கரையை அதிகப்படுத்துவதும் இதுவே. திரையிலோ, நேரிலோ ஏதாவது ஒரு பயங்கரத்தைப் பார்க்கும்போது உடல் புல்லரிக்கிறது அல்லவா? அதற்குக் காரணம் இந்த ஹார்மோன் அப்போது அதிகமாகச் சுரப்பதுதான்.
இதுபோல், சண்டை (Fight), ஓட்டம் (Flight), பயம் (Fright) ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் உடல் ஆற்ற வேண்டிய விரைவான செயல்பாடுகளுக்குத் தயார் செய்வதும் இந்த ஹார்மோன்தான். உதாரணத்துக்கு, பாம்பைக் கண்டால் பயந்து ஓடுகிறீர்கள்; கோபம் வந்தால் சண்டை போடுகிறீர்கள். அப்போது இந்த ஹார்மோன்தான் அதிகமாகச் சுரந்து உடலியக்கங்களைச் செயல்படுத்துகிறது. ஆகவே இதற்கு ‘3F ஹார்மோன்’ என்று ஒரு பெயர் உண்டு.
நார் அட்ரீனலின் ஹார்மோன் இதயத் தமனிக் குழாய்களைத் தவிர மற்ற எல்லாத் தமனிக் குழாய்களையும் சுருங்க வைத்து, உடலில் ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. மனிதருக்கும் நாய் போன்ற சில விலங்குகளுக்கும் அட்ரீனலின் ஹார்மோன்தான் பிரதானம். பூனைக்கு மட்டும் நார் அட்ரீனலின் ஹார்மோன் பிரதானமாக வேலை செய்கிறது. மேலும் நாம் குழந்தையாகத் தாயின் வயிற்றில் வளரும்போது, நார் அட்ரீனலின் ஹார்மோன் மட்டுமே சுரக்கிறது. அட்ரீனலின் அப்போது சுரப்பதில்லை. நாம் பிறந்த பின்புதான் அது சுரக்கத் தொடங்குகிறது.



Popular Feed

Recent Story

Featured News