Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 30, 2018

கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி

பள்ளிகளில் பெண் குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி தொடங்கியது.சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 



இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 32 மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் கூறியதாவது: கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது தொடர்பான சட்டம் எனப்படும் போக்சோ 2012 சட்டம் குறித்து பயிற்சி அளிப்பது, அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட பயிற்சி கொடுத்து போக்சோ சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க இந்த மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது.







நீதித்துறையின் ஜஸ்டிஸ் கமிட்டியின் அறிவுரையின் பேரிலும் அரசின் முயற்சியாலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, குழந்தைகளின் நடத்தையை வைத்தே கண்டறிதல் வேண்டும். பாதுகாப்பு வளையத்தில் இருந்து எந்த குழந்தையும் வெளியில் வந்துவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. 

குழந்தைகளிடம் தெரியும் மாற்றம், பெற்றோரிடம் பேசி தீர்வு காண்பது, தனித்து உள்ள குழந்தைகளிடம் உள்ள குறைகளை கண்டறிதல் ஆகியவை ஆசிரியர்களால்தான் முடியும். அதனால் அனைத்து பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் அளிக்கப்படுகிறது. போக்சோ என்ற வார்த்தை மக்கள் மத்தியில் அரசு வெளியில் கொண்டு வந்த விழிப்புணர்வால்தான் இது தெரியவந்தது. எல்லாம் ஒன்று திரண்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மனநிலை எல்லோருக்கும் வர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News