Friday, August 3, 2018

முகவரிச் சான்று இல்லாமல் ஆதார்:-திடீர் மாற்றம்!






முகவரிச் சான்று இல்லாமல் ஆதார்!

தற்போதைய முகவரிக்கான முறையான சான்றுகள் இல்லாதவர்களும் ஆதார் அட்டை பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

அடிக்கடி வாடகை வீட்டை மாற்றுபவர்கள் மற்றும் பணி செய்யுமிடத்தில் தங்கும் வழக்கம் கொண்ட தொழிலாளர்கள் ஆதார் அட்டை பெறுவது கடினமாக உள்ளது. இவர்களில் பலரால், தற்போது வசிக்கும் இருப்பிடத்திற்கான சான்றுகளை அளிக்க முடிவதில்லை. 



இதை மீறி அவர்கள் அளிக்கும் சான்றுகளும் முறையானதாக இல்லை. நிரந்தர முகவரியும் இல்லாமல், தற்போதைய இருப்பிடத்திற்கான சான்றையும் அளிக்க இயலாமல் இவர்கள் தடுமாறுகின்றனர். அடிப்படை வசதிகள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஆதார் அடையாள அட்டையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், இவர்களில் பலர் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த ஜூலை 31ஆம் தேதியன்று அறிவிப்பொன்றை வெளியிட்டது ஆதார் ஆணையம். இதன்படி, தற்போதைய முகவரிக்கான முறையான சான்று இல்லாதவர்களும்கூட, ரகசிய பின் (PIN) நம்பர் கொண்ட கடிதத்தின் மூலமாக ஆதார் அட்டையைப் பெற முடியும். “முறையான முகவரிச் சான்று இல்லாமல் ஆதார் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள், ரகசிய பின் நம்பர் உள்ள ஆதார் கடிதத்துடன் முகவரி சரிபார்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம். 

சம்பந்தப்பட்ட முகவரியில் வசிக்கும் நபர் அந்தக் கடிதத்தைப் பெற்ற பின்பு, தானாக ஆதார் அடையாள அட்டை விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் இணையதளத்தில் ரகசிய பின் நம்பர் உதவியுடன் அவரது முகவரியைப் பதிவு செய்யலாம்” என்று கூறியுள்ளது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான பின் நம்பரைக் கடிதத்தில் அனுப்புவது போல, இந்த முறை செயல்படுத்தப்படும் என்று ஆதார் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



ஆனால், இதற்கான பரிசோதனை முயற்சிகள் வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்குமென்று கூறப்பட்டுள்ளது. தற்போது ஆதார் முகவரிச் சான்று சரிபார்த்தலுக்காக பாஸ்போர்ட், பாஸ்புக், திருமணச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாடகைப் பத்திரம் உள்ளிட்ட 35 சான்றுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Popular Feed

Recent Story

Featured News