கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது. கூட்டுறவுச் சங்க தேர்தல் ஆணைய செயலாளர் தேவகி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அப்போது, கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாததற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, தேர்தல் முறையாக நடத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பினால் மட்டும் போதாது அதை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டாம். இதனால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள் என நீதிபதி எச்சரித்தார். கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜனநாயக படுகொலை செய்யாதீர், அலுவலர்களான நீங்கள் உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி பாரதிதாசன் எச்சரிக்கை விடுத்தார்.