மும்பை : ரூபாய் நோட்டுகளின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையில், 'வார்னிஷ்' செய்யப்பட்ட நோட்டுகளை, சோதனை அடிப்படையில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின்,2017- 18-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது: 2017 - 18ம் ஆண்டில், 1,250 கோடி எண்ணிக்கை உடைய பழைய, சேதமடைந்த ரூபாய் நோட்டு தாள்கள் அழிக்கப்பட்டன.
அதே நேரத்தில், 2017 - 18ம்ஆண்டில், 2,270கோடி தாள்கள் அழிக்கப் பட்டன. செல்லாததாக அறிவிக் கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளும் இதில் அடங்கும்.ரூபாய் நோட்டுகளின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இதன் மூலம், ரூபாய் நோட்டு அச்சடிக்கும்செலவுகள் குறையும்.
சர்வதேச அளவில் செயல்படுத்தப்படும் முறைகளை ஆய்வு செய்ததன்அடிப்படையில், ரூபாய் நோட்டுகளை வார்னிஷ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. சோதனை முறையில், வார்னிஷ் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகமாகும். அதன் வெற்றியை தொடர்ந்து, அடுத்து அச்சடிக்கும் அனைத்து நோட்டுகளும் வார்னிஷ் செய்யப்படும். இவ்வாறு ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.