Wednesday, August 29, 2018

அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

'அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.



துாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை.



தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.

பணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார்? பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார்? என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.



Popular Feed

Recent Story

Featured News