Saturday, August 4, 2018

எம்.பி.பி.எஸ்.: அனைத்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பின: இன்றைய கலந்தாய்வு ரத்து

தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் நிரம்பின.
இதன் காரணமாக சனிக்கிழமை (ஆக.4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.



அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் 516 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 715 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கான நீட்டிக்கப்பட்ட முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டில் மீதமிருந்த 128 இடங்களும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்குள்ளாகவே நிரம்பின என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலந்தாய்வு ரத்து: இதன் காரணமாக ஆகஸ்ட் 4 -ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியதால், சனிக்கிழமை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் யாரும் கலந்தாய்வுக்கு வர வேண்டாம். 

சனிக்கிழமை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
புதிய அட்டவணை: நீதிமன்ற வழக்குகளின் காரணமாக கலந்தாய்வு அட்டவணையில் குளறுபடிகள் ஏற்பட்டதால், மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் புதிய அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: 




பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கை தொடர்பான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து கலந்தாய்வு அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் புதிய அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.
அந்த அட்டவணையின்படி, மாநில அரசுகள் இறுதிக்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 22 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இறுதிக்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 31 -ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News