புதுடில்லி : ‘கூகுள் இந்தியா’ நிறுவனம், நுகர்வோருக்கு கடன் வழங்கும் சேவையில் களமிறங்க உள்ளது. இதற்காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, பெடரல் வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து, கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவுக்கு என, கூகுள் பே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்துவோர், சில வினாடிகளில் சிறு கடன்களை பெற, நான்கு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த நபர்களின், வங்கிக் கணக்கில், உடனடியாக கடன் தொகை வரவு வைக்கப்படும். மிகக் குறைந்த ஆவண நடைமுறைகளில், சுலபமாக சிறு கடன்களை பெறலாம்.
பஸ், உணவகம், பழுதுபார்ப்பு சேவை உள்ளிட்டவற்றுக்கு, கூகுள் பே மூலம் பணம் செலுத்தலாம். நாட்டில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பெரு மற்றும் சிறிய நகரங்களில், 5.5 கோடி பேர், இந்த ஆப்பை பதிவிறக்கியுள்ளனர். ஆண்டுக்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.