நாம் 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்று விட்டோம் என்றாலும், அன்றே நாம் முழு இறையாண்மை கொண்ட அரசால் ஆளப்படும் நாடாக ஆகிவிடவில்லை. நாம் முழு இறையாண்மை பெற்ற நாள்தான் ஜனவரி 26. ஏனென்றால், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதியன்றுதான் நம் அரசமைப்புச் சட்டம் ‘உயிர்’ பெற்றது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது என்று முடிவெடுத்த பிறகு, 1946-ஆம் ஆண்டு, பிரிட்டீஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி, தனது அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பினார். அது இங்குள்ள தலைவர்களுடன் எந்த நடைமுறையைப் பின்பற்றி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவது என்று விவாதித்தது. அப்போது அரசமைப்புச் சட்டத்தை வடிவமைக்க ‘அரசமைப்புச் சட்ட வடிவமைப்பு மன்றம்’ ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
1947-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதியன்று, பிரிட்டீஷ் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. ‘இந்திய சுதந்திரச் சட்டம்’ (Indian Independence Act) என்ற அந்தச் சட்டம் முக்கியமாக மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தன. 1. பிரிட்டீஷார் ஆளுகைக்குக் கீழிருந்த நிலப்பகுதிகள் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்படும். 2. அந்தந்த நாடுகள் தங்களுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அந்தச் சட்டம் உருவாக்கப்படும்வரை, அவை ஒவ்வொன்றும் பிரிட்டீஷ் அரசின்கீழ் டொமினியன் அந்தஸ்து கொண்ட நாடாக, காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினராக இயங்கி வரும். 3.இந்த நிலப்பகுதிகளில் இருந்து வந்த சமஸ்தானங்கள் (அரசர்களால் ஆளப்பட்ட பகுதிகள்) மீதான அதிகாரத்தை பிரிட்டீஷ் அரசு விலக்கிக் கொள்கிறது என்பவை அந்த மூன்று முக்கிய அம்சங்கள்.
இந்தச் சட்டத்தின்படி இந்தியா, ஓர் அரசமைப்புச் சட்ட வரைவு மன்றம் ஒன்றை உருவாக்கிக் கொண்டது. மாநிலங்களில் இயங்கி வந்த சட்ட மன்றங்களின் உறுப்பினர்கள் இந்த மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மன்றத்தில் 217 பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களில் 15 பேர் பெண்கள்.
இந்த மன்றத்தின் தற்காலிகத் தலைவராக இரண்டு நாள்களுக்கு சச்சிதானந்த சின்ஹா இருந்தார். பின், மன்றம் ராஜேந்திர பிரசாத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.
அரசமைப்புச் சட்டத்தை வரைய டாக்டர். அம்பேத்கர் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த ஆறு பேரில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர், கோபால்சாமி ஐயங்கார்), கே.எம்.முன்ஷி, பி.எல்.மிட்டர், முகமது சாதுல்லா, டி.பி. கைத்தான் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள். இந்தக் குழுவிற்கு ஆலோசனைகள் சொல்ல பி.என் ராவ் என்பவரும் இருந்தார். இடையில் மிட்டர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த இடத்தில் மாதவராவ் நியமிக்கப்பட்டார். கைத்தான் இறந்து போனதையடுத்து டி.டி. கிருஷ்ணமாச்சாரி (TTK) நியமிக்கப்பட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம், இந்த உறுப்பினர்கள் பலரும் இன, மத, மொழிச் சிறுபான்மையினர். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சாதுல்லா இஸ்லாமியர் மட்டுமல்ல, அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர். முன்ஷி, குஜராத்தி. அல்லாடி கிருஷ்ணசாமி, கோபால் சாமி ஐயங்கார், மிட்டர் ஆகியோர் சட்டப் புலிகள். டிடிகே மொழிச் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர். இந்தி பேசும் மாநிலத்தவர் யாரும் இல்லை என்றாலும், அரசமைப்புச் சட்டத்தின் ஆங்கிலப் பிரதியோடு ஓர் இந்திப்பிரதியும் உருவாக்கப்பட்டது.
1947-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, இந்தக் குழு ஒரு வரைவுச் சட்டத்தை மன்றத்தின்முன் தாக்கல் செய்தது. 2000க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. மன்றம், 166 நாள்கள் கூடி இவற்றை விவாதித்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் (2 ஆண்டுகள், 11 மாதங்கள் 18 நாள்கள்) செயல்பட்ட அரசமைப்பு வரைவு மன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி, 80 ஆயிரம் வார்த்தைகளில் அமைந்த அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஜனவரி 24ம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டாலும், ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. ஏனெனில், விடுதலைப் போரின்போது, 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில்தான் முழுமையான சுதந்திரத்தையன்றி வேறெதையும் ஏற்க மாட்டோம் என அறிவிக்கப்பட்டது.
நமது அரசமைப்புச் சட்டம் கைகளால் எழுத்துக்களைக் கொண்டு வரையும் Caligraphy என்ற முறையில் எழுதப்பட்டது. அந்தப் பக்கங்களின் விளிம்புகள் சாந்தி நிகேதனைச் சேர்ந்த ஓவியர்கள் நந்தலால் போஸ், பி.ராம் மனோகர் சின்கா ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டன.
உலகிலேயே மிக நீளமான அரசமைப்புச் சட்டம் நம்முடையதுதான். அது உருவானபோது, ஒரு முன்னுரையும், 22 பகுதிகளில் அமைந்த 395 சட்டங்கள், 8 அட்டவணைகள் கொண்டதாக இருந்தது. இன்று (2012ம் ஆண்டு நிலவரப்படி) அது 97 சட்டத்திருத்தங்களைக் கண்டு, 25 பகுதிகள், 463 சட்டங்கள், 12 அட்டவணைகள், 2 பின்னிணைப்புக்கள் கொண்டதாக இருக்கிறது.
இந்திய மக்களுக்கு நீதி, சமத்துவம், சுதந்திரம் இவற்றை உறுதி செய்வதாகவும், சகோதரத்துவத்தை வளர்க்க முயல்வதாகவும் சொல்லும் நம் அரசமைப்புச் சட்டம், இந்தியா ஒரு தனி இறையாண்மை கொண்ட, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனப் பிரகடனம் செய்கிறது. நம் அரசமைப்புச் சட்டம், ‘இந்திய மக்களாகிய நாம்’ (We the people of India) என்று மக்களிலிருந்துதான் துவங்குகிறது.