Thursday, August 30, 2018

School Morning Prayer Activities - 30.08.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

திருக்குறள்:40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.


உரை :
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.



பழமொழி :

Bare words buy no bar ley
வெறுங்கை முழம் போடுமா?

பொன்மொழி :

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால்
நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
- ஜேம்ஸ் ஆலன்.

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?
சேலம்

2.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?

1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது



நீதிக்கதை :

உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.
அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.
அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.



மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.
தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.
நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்

இன்றைய செய்தி துளிகள்:

1.பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 99.3% திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

2.மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

3.ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

4. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவு



5.ஆசிய விளையாட்டுப்போட்டி: 11 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் மொத்தம் 54 பதக்கங்களுடன் 8வது இடத்தில் இந்தியா.

Popular Feed

Recent Story

Featured News