Tuesday, September 11, 2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -12-09-2018

திருக்குறள்:50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உரை:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.



பழமொழி :

Better an open enemy than a false friend

போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்

பொன்மொழி:

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல

-வின்ஸ்ட்டன் சர்ச்சில்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா




2.தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19

நீதிக்கதை :

நன்றி ஓடுகளே!



ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.



ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

இன்றைய செய்தி துளிகள்:

1.சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அந்தஸ்து வழங்குவது குறித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

2.சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம் செய்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

3.உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது தொடர்பாக செப்.24-ம் தேதி தமிழக அரசு பதில் தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

4.அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு : பிரதமா் மோடி அறிவிப்பு



5.யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: பைனலில் டெல்போட்ரோவை வீழ்த்தினார்

Popular Feed

Recent Story

Featured News