Tuesday, September 18, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.18

செப்டம்பர் 18 - உலக நீர் கண்காணிப்பு தினம்

திருக்குறள்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
விளக்கம்:



பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.

பழமொழி

Blessed are the meek, for they shall inherit the earth

பொறுத்தார் பூமி ஆள்வார்

இரண்டொழுக்க பண்பாடு

1. எண்ணெய் பொருட்களை அதிகம் உண்ணாமல் தவிர்த்திடுவேன்.

2. எனக்கு ஏற்படும் சிறு உபாதைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காண முயல்வேன்.

பொன்மொழி

உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கின்றாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே.

-டால்ஸ்டாய்

பொது அறிவு

1. இந்தியாவில் சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?

ராஜஸ்தான்

2. தமிழ்நாட்டில் உதயகிரி கோட்டை எங்கு உள்ளது?

கன்னியாகுமரி

English words and Meanings



Famous. பிரபலம்
Fabulous. அற்புதமான
Fantasy. கற்பனை
Fancy. புதுமை
Factor. காரணி

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

*வாழைத்தண்டு*

1. சிறுநீரகப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கவல்லது.

2.உடல் எடை குறைக்க உதவுகிறது.

நீதிக்கதை



சோதனையை வெல் - ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.

தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.



மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.








இன்றைய செய்திகள்

18.09.18

* கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் திங்கள்கிழமை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

* தேனா பாங்க், பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க் ஆகிய 3 வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு இந்தியாவின் 3-ஆவது பெரிய வங்கி சேவை உருவாகியுள்ளதாக நிதித்துறை சேவைகளின் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

* பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்பதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

* போலந்து மற்றும் துருக்கி சர்வதேச குத்துச் சண்டையில் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட இந்திய அணியினர் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர்.

* இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பளு தூக்கும் வீராங்கனை மிராபாய் சானுவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள்.

Popular Feed

Recent Story

Featured News