Sunday, September 23, 2018

ஒருவருக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!



இன்று இந்தியாவில் ஏராளமானோர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் ஆகும். இந்த இரண்டு வகையான சர்க்கரை நோய்க்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன. அந்த வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.



சர்க்கரை நோயில் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுவது டைப்-2 சர்க்கரை நோயால் தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 90% பேருக்கு டைப்-2 சர்க்கரை நோய் தான் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் டைப்-2 சர்க்கரை நோயால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக டைப்-2 சர்க்கரை நோய் வயதான காலத்தில் தான் ஒருவரைத் தாக்கும். ஆனால் சமீப காலமாக இளம் வயதினரும், சில சமயங்களில் குழந்தைகள் கூட டைப்-2 சர்க்கரை நோயால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.


டைப்-2 சர்க்கரை நோய் என்றால் என்ன?

டைப்-2 சர்க்கரை நோய் என்பது ஒருவரின் வளர்சிதை மாற்ற கோளாறு ஆகும் மற்றும் இந்த பிரச்சனை இருப்போரது இரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவு மிகவும் அதிகமாக இருக்கும். ஒருவரது இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் போதுமான இன்சுலின் இல்லாமை ஆகும்.

இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?



இன்சுலின் எதிர்ப்பு என்றால் உடலில் உள்ள செல்கள் கணையம் வெளியிடும் இன்சுலினுக்கு முழுமையாக பதிலளிக்காமல் இருக்கும். இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், இன்சுலினானது சரியாக வேலை செய்யாமல் இருக்கும். இதன் விளைவாக இரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ் செல்களுக்குள் நகராமல் அப்படியே தங்கி, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகிறது. டைப்-2 சர்க்கரை நோயின் ஆரம்ப காலத்தில், கணையமானது அதிகளவு இன்சுலினை உற்பத்தி செய்து, இப்பிரச்சனையைத் தடுக்க முயற்சிக்கும். நாளாக ஆக, கணையம் மிகவும் குறைவான அளவில் இன்சுலினை உற்பத்தி செய்து, நாளடைவில் கணையம் இன்சுலின் உற்பத்தியையே நிறுத்திவிடும்.

பலருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் என்று தான் தெரியும். ஆனால் ஒருவருக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைத் தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே டைப்-2 சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற முடியும். சரி, இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போமா!

எடை குறைவு

நீங்கள் நிறைய உணவுகளை உட்கொண்டு வந்தும், உங்கள் உடல் எடை குறைகிறதா? அப்படியானால் உங்கள் உடல் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று அர்த்தம். ஏனெனில் ஒருவரது உடலில் இன்சுலின் அளவு போதுமானதாக இல்லாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தசை செல்களுக்கு அனுப்ப முடியாமல் போகும். இதன் விளைவாக உடல் எடையை இழக்க நேரிடும்.

தொற்றுகள்

டைப்-2 சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஈஸ்ட் தொற்றுக்களின் அபாயம் அதிகம் இருக்கும். ஏனெனில் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதைத் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் அதிகமாக இருக்கும்.

பாதங்கள் மரத்துப் போதல் அல்லது வலி

பாதங்கள் அடிக்கடி மரத்துப் போவது மற்றும் பாதங்கள் வலிமையிழந்து இருப்பது போன்றவைகளும் எச்சரிக்கை அறிகுறிகளாகும். ஏனெனில், பாதங்கள் இதயத்தில் இருந்து தொலைவில் இருப்பதால், இரத்தத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், பாதங்களில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

காயங்கள் மெதுவாக குணமாவது

ஒருவருக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருந்தால், அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டால், அது விரைவில் சரியாகாமல், குணமாவதற்கு பல நாட்கள் எடுத்துக் கொள்ளும். இதை வைத்தும் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.



உயர் இரத்த அழுத்தம்

சாதாரண நிலையில் ஒருவரது இரத்த அழுத்த அளவானது 140/90 ஆகும். ஆனால் டைப்-2 சர்க்கரை நோய் இருந்தால், இரத்த அழுத்த அளவானது 135/80-ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள, அவ்வப்போது இரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

அளவுக்கு அதிகமான தாகம்

ஒருவருக்கு எந்நேரமும் தாகத்துடன் இருப்பது போன்ற உணர்வு இருந்தால், அவருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இது ஒரு பொதுவான அறிகுறியும் கூட. சொல்லப்போனால், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், வாய் வறண்டு போவதோடு, அதுவே முதன்மையான அறிகுறியாகவும் இருக்கும்.

இனிப்பின் மீது ஆசை

திடீரென்று உங்களுக்கு பசி அதிகமாக, அதுவும் இனிப்பு பலகாரங்களை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுந்தால், அது சர்க்கரை நோய் வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஏனெனில் இதற்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது தான் காரணம்.


Third party image reference
மங்கலான பார்வை

ஒருவருக்கு திடீரென்று பார்வை மங்கலாக தெரிய ஆரம்பித்தால், அதுவும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே பார்வை மங்கலாக தெரிவது போன்று இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வைப் பெறுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்று தான் அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

தூங்குவதில் பிரச்சனை

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியாக தூங்க முடியாமல் தவிப்பார்கள் மற்றும் ஓய்வு நேரத்தில் கூட தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் வலி, அசௌகரியம், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு போன்ற சர்க்கரை நோயின் இதர அறிகுறிகள் தான்.

களைப்பு



மிகுதியான களைப்பும் சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், அது ஒருவரை சோம்பேறித்தனத்தை அதிகமாக்குவதோடு, மிகுதியான களைப்பையும் உண்டாக்குகிறது.

சரும பிரச்சனைகள்

உங்களது சருமம் அதிகமாக வறட்சியுடன் மற்றும் அரிப்புடன் அல்லது சருமம் கருமையாகவோ மாற ஆரம்பித்தால், உங்கள் இரத்தம் அல்லது இரத்த ஓட்டத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

மனநிலையில் ஏற்ற இறக்கம்

உங்களது மனநிலையில் சமீப காலமாக ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஒருவரது இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும் போது தான் மனநிலையில் ஏற்ற இறக்கத்தை சந்திக்க நேரிடும். மேலும் உடல் ஆற்றலும் குறைந்தது போன்ற உணர்வைப் பெறக்கூடும்.

Popular Feed

Recent Story

Featured News