Tuesday, September 4, 2018

அரசுப் பள்ளிகளில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தி, 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருத்தணியில் நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.



திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்காக, ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. அதே போல், பூனிமாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மேலும், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஆதிவராகபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.



இந்த மூன்று பள்ளிகளின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். அரக்கோணம் எம்.பி. கோ. அரி, திருத்தணி
எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து, பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி, கலைப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது: இந்தியாவிலேயே தமிழகம்தான் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் அமைதியாக உள்ளதாலும், மின்வெட்டு இல்லாத மாநிலம் என்பதால் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் சீருடை மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வண்ணச் சீருடை மாற்றம் செய்யப்படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு சார்பில் வண்ணச் சீருடைகள் வழங்கப்படும்.

கடந்த 2017 -ஆம் ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதிவண்டிகள் வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் காலதாமதம் ஆனது. தற்போது, வழக்கு முடிந்துவிட்டதால், மிதிவண்டிகள் அடுத்த மாதமும், மடிக்கணினிகள் வரும் டிசம்பர் மாத இறுதியிலும் வழங்கப்படும்.

புதிய பாடத்திட்டம் 1500 ஆசிரியர்கள், 72 உதவியாளர்கள், 7 இசை ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக, மொத்தம் 432 மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், அரசுப் பள்ளிகள் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை.

அடுத்த ஆண்டிற்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தி, 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் சிறந்தவர்கள் என ஆந்திர மாநிலத்தில் நீட் பயிற்சி அளிக்கும் சைதன்யன் நிறுவன இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார். இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், மாதம் ரூ.7,500 சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.



நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன் (பொன்னேரி), விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி), முன்னாள் ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் திருத்தணி நகர் மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்கள் இ.என்.கண்டிகை எ.ரவி, ஆர்.கே.பேட்டை இளங்கோ, பள்ளிப்பட்டு சாந்திபிரியா சுரேஷ், திருவாலங்காடு ஒன்றியச் செயலாளர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் அருள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி நன்றி கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News