Friday, September 7, 2018

412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். 



இது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான வகுப்புகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும்.
திருநெல்வேலியில் இன்று...: இது தொடர்பாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் (செங்கோட்டையன்) பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளேன். இந்த பயிற்சித் திட்டத்தில் 3,200 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது தவிர விருப்பம் உள்ள மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.



கடந்த ஆண்டைப் போலவே ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், பள்ளி செயல்படும் நாள்களில் தினமும் ஒரு மணி நேரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மணி நேரமும் பயிற்சி வழங்கப்படும். 

நுழைவுத் தேர்வுகளை தமிழில் எழுத...: மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் நடத்தும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நமது மாணவர்கள் தமிழ் மொழியிலும் எழுத தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஆசிரியர்களை அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

நியமனத் தேர்வு எப்போது? : டெட்' தேர்வு என்பது ஆசிரியர் தகுதித் தேர்வே தவிர நியமனத் தேர்வு அல்ல; ஆசிரியர் தகுதித் தேர்வை வைத்தே ஆசிரியர் நியமனத்தை நடத்த வேண்டும் என சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கை முறையாக எதிர்கொண்ட பின்னர் நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். 



2,000 பேருக்கு ஆசிரியர் பணி: பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை தொடர்புடைய பள்ளிகளே பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலமாக நிரப்பிக் கொள்ள தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.7,500 ஊதியத்தில் சுமார் 2,000 பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News