Wednesday, September 19, 2018

ஹெல்மெட் வழக்கு: நாளை தீர்ப்பு ..!!

“இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவும் இல்லை, அதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.




“மோட்டார் சட்ட விதிகளின் படி, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு அமல்படுத்தவில்லை. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளத் தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, தமிழக அரசு பதிலளிக்குமாறு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மணிகுமார், நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நேரில் ஆஜராகி அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதிகள், "அரசுத் தரப்பில் அறிக்கையைத் தாக்கல் செய்தால் மட்டுமே போதாது; தமிழக அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது; அதை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் செய்யத் தமிழக அரசு தவறி விட்டது" எனத் தெரிவித்தனர்.

"காவல் துறையினர் கூட இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவதில்லை. காரில் செல்லும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூட சீட் பெல்ட் அணிவதில்லை. மேலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனங்கள் வரும்போது, காவல் துறையினர் தேசியக் கொடிக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர்" என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

அரசு உருவாக்கும் சட்டத்தில் இருப்பதையே அமல்படுத்தச் சொல்கிறோம் என்றும், கட்டாய ஹெல்மெட் என்பதை நீதிமன்றச் சட்டமாகப் பார்க்கக் கூடாது என்றும் கூறினர் நீதிபதிகள்.



கட்டாய ஹெல்மெட் அணிவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்தத் தமிழக அரசு தவறி விட்டதாகக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Popular Feed

Recent Story

Featured News