Tuesday, September 25, 2018

ம.பி.: திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம்!




விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு மாதாந்தர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு.

மத்தியப் பிரதேச மாநில சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையானது, திருமணமாகாமல் இருக்கும் வயதான பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது. நேற்று (செப்டம்பர் 24) அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, 50 முதல் 79 வயது வரையிலான பெண்களுக்கு மாதாந்தர ஓய்வூதியமாக ரூ.300ம், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.500ம் வழங்கப்படவுள்ளது.



மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவையின் பதவிக்காலம் இவ்வாண்டு இறுதியில் முடிவடையவுள்ளது. அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், பெண்களின் வாக்குகளைக் கவரும் விதமாக, பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது தற்போது ஆட்சியிலிருந்து வரும் சவுகான் தலைமையிலான பாஜக அரசு. 2018ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதியன்று தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4.84 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது, மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 48 சதவிகிதம் ஆகும்.

நேற்று நடந்த ம.பி. அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அம்மாநிலத்திலுள்ள 676 காவல் நிலையங்களில் பெண் ஊழியர்கள் மற்றும் புகார்தாரர்கள் பயன்படுத்தும் விதமாகத் தனியறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்ட ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 49.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் நன்றாகப் படிக்கும் 100 இளங்கலை மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சியை இலவசமாக அளிக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.



Popular Feed

Recent Story

Featured News