Monday, September 10, 2018

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமைமுதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.



பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப். 24-ஆம் தேதி முதல் அக். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்குச் சென்று செப்.5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (செப்.11, 12) ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 



இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், கடலூர், வேலூர், சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேலும் தேர்வுக் கட்டணம் ரூ.125, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என மொத்தம் ரூ.675 பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும் என அரசுத்தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News