Thursday, September 6, 2018

வாழ்க்கைப் பயணத்தில்…

இருள் சூழ்ந்த சொர்க்கம்

இன்னும் சற்றே வெளியே வந்து

இரு கைகளில் நீந்திய குழவி பருவம்

இலக்கணமில்லா நாட்களில்

இனிப்புகளைப் பார்த்து

இனிதாய் இயங்கியப் பொழுதுகள்

இலக்கங்களை கற்கும் போது

இலகுவாய்

இயக்கிய தவறுகள்

இம்மை, மறுமை, முதுமை

இவைப் பற்றி

இலக்கியங்களில் இணைந்த தருணம்

இவை வேணும் அவை வேணும்

இசை பாடி தாய் தந்தை

இருவரிடமும் கெஞ்சிய தருணம்

இப்படித்தான் செய்யனும்

இதைத் தான் செய்யனும் என

இணங்க வைத்த ஆசிரியர்கள்

இசைக்கோலம் போட்டு

இரவில் தூக்கம் கெட்டு

இன்பம் களித்த விழாக்காலங்கள்

இருபது காசு ஆரஞ்சு மிட்டாயிலிருந்து

இன்னீக்கி மட்டும் காட்டுனு

இல்லீகல் தேர்வு பல எழுதி

இறுதி பிரிவில் மனதை

இரும்பாக்கிய நண்பர்கள்

இவ்வளவு காலம் படித்து

இதைத் தான்

இதுவரை படித்தோமா!

இது தான் படிப்பா என வியந்த காலம்

இரவு நேரங்களில்

இயற்கையிடமிருந்து

இரவல் வாங்கிய காற்றில்

இன்புற்ற வாலிபங்கள்

இதை சரி என செய்தாலும் ஏசும்

இல்லாததை சரி செய்தாலும் ஏசும் இவ்வுலகம்!

இதற்காக மனம் உடைந்தும் உடையாமல்

இதற்கு செவி கொடுத்தும் கொடுக்காமல்

இரவில் அழுத நாட்கள்

இசைக்கு அடிமையாக்கி

இன்செய்திகளை

இன்னா செய்திகளை

இணைத்து வழங்கிய சினிமாக்கள்

இனி எதுவும் வேண்டாம்!

இது போதும்!

இதுவே போதும்!

இப்படியெல்லாம் சொல்ல சொல்லும்

இன்பமளிக்கும் ஒரு வேலை

இல்வாழ்க்கை இனிதே தொடங்க

இனியவனை(ளை) கைக்கோர்த்து

இணையும் தருணம்

இல்வாழ்க்கை அடையாளமாய்

இறுதி நாட்களில் நாம் தவழ

இயன்றெடுத்த குழவியின் விரல்கள்

இவ்வளவு காலம் கடந்து

இல்லற வாழ்க்கையிலும்

இன்று உலக வாழ்க்கையிலும்

இயைந்தோடும் நினைவுகளில்

இருக்கும் முதுமை

இறந்தான்(ள்) துறந்தான் (ள்)

இச்செய்தி ஊரெங்கும் பரவ

இப்படிப்பட்டவள் (ன்)

இவ்வுலகில் இல்லை!

இல்லை! இல்லை!

இவையெல்லாம் காதில் பட

இனி இவன்(ள்) இல்லையே!

இது தாங்க

இதுவரைக்கும்

இயல்பான வாழ்க்கை!

Popular Feed

Recent Story

Featured News