Saturday, September 15, 2018

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியீடு

கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்!
கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்! புதுச்சேரியில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, ரூ.1லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது புதுச்சேரி அரசு. சமீபத்தில் நடந்த அம்மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, இந்த ஊக்கத்தொகையை 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் நாராயணசாமி. இது தொடர்பான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலத் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

“புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஒப்புதலோடு கவர்னர் கிரண்பேடி 14.9.2017 முதல் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு கலப்புத் திருமண ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2½ லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.



அதன்படி அரசாணை எண். 02/2018-19 Wel (SCW), 07.09.2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News