Tuesday, September 25, 2018

இஸ்ரோ கட்டுரை போட்டியில் மாணவர்கள் கலக்க வாய்ப்பு

உலக விண்வெளி வார விழா கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு





உலக விண்வெளி வார விழாவையொட்டி பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக மேலாளர் ஏ. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் வரும் அக். 4 முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி, "விண்வெளிச் சுற்றுலா' என்ற தலைப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், "வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு' என்ற தலைப்பி 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.



கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். ஏ 4 அளவுள்ள வெள்ளை தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகக்கூடாது. ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.

இவ்விரு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். தலைமையாசிரியர் ஒப்புதல் சான்று தேவை. கட்டுரையை வரும் அக். 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு அதே தலைப்புகளில் தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் அக்.4இல் காலை 10 மணிக்கு நடைபெறும். நேரம் 5 நிமிடங்கள் மட்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவில் 2 மாணவர்கள் வீதம் 4 பிரிவுகளில் 8 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
ராக்கெட் ஏவுதல்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அக். 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு கல்லூரிக்கு இருவர் வீதம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்விரு போட்டிகளுக்கும் அக். 3 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். தமிழ் ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் 3 பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்படும்.



கட்டுரைகளை அனுப்பவும், பேச்சு மற்றும் ராக்கெட் ஏவுதல் போட்டிக்கு பெயர் பதிவு செய்வதற்குமான முகவரி:

நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி-627 133, திருநெல்வேலி மாவட்டம். மேலும் விவரங்களை 04637 281210, 94421 40183, ஆகிய தொலைத்தொடர்பு எண்கள் மூலம் அறியலாம்

Popular Feed

Recent Story

Featured News