Wednesday, September 12, 2018

அமலுக்கு வந்தது 'எய்ட்ஸ்' சட்டம்

புதுடில்லி : 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு
உள்ளிட்டவற்றில் சம உரிமை அளிக்கும் வகையிலான புதிய சட்டம், அமலுக்கு வந்தது.



எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி, வீடு வாடகைக்கு தருவது போன்றவற்றில் பாகுபாடு காட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டனர். அதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்., 20ல் இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், இந்த சட்டம் நேற்று முன்தினம் முதல், அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. அவ்வாறு பாகுபாடு காட்டுவது குற்றமாக கருதப்படும்.



இந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட ஒரு பொது நலன் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சட்டம் நிறைவேற்றுவீர்கள்; ஆனால் அதை அமல்படுத்த மாட்டீர்களா?' என, உயர் நீதிமன்றம், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News